நலிவுற்ற மக்கள் நலம்பெற ஒரு லட்சம் தனி வீடுகளுக்கு மானியம் - சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
|நலிவுற்ற மக்கள் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அறிவிப்புகளை அமைச்சர் தா. மோ.அன்பரசன் வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் ரூ,70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் பயன்பெறும் வகையில் தாமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் நலனுக்காக நாவலூர் திட்ட பகுதியில் ரூ,1,25 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்படும். பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பகுதியில் ஒரு கோடி மதிப்பீட்டில் தொழில் பயிற்சி கூடம் அமைக்கப்படும். மகளிர் மேம்பாட்டிற்காக 2 ஆயிரம் மகளிருக்கு சிறப்பு சுய தொழில் பயிற்சி வழங்கப்படும்.
ஈரோடு நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5,000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.