வேலூர்
ஆடு, கோழி, பன்றிகள் வளர்க்கும் தொழில் முனைவோருக்கு மானியம்
|ஆடு, கோழி, பன்றிகள் வளர்க்கும் தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆடு, கோழி, பன்றிகள் வளர்க்கும் தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உற்பத்தி அதிகரிப்பு
கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டு முதல் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கால்நடை இயக்கத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு, இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
இதன் நோக்கமானது கோழி, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறி, வெள்ளாடு இனங்களை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதல் ஆகும்.
தொழில்முனைவோருக்கு மானியம்
இந்த திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்போருக்கு 1,000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்து கோழிக்குஞ்சுகளை 4 வாரம் வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
அதேபோன்று வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வளர்ப்போருக்கு 500 பெண் ஆடுகள், 25 கிடா கொண்ட பண்ணை அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் 2 தவணைகளில் வழங்கப்படும்.
பன்றி பண்ணை அமைக்கும் நபர்களுக்கு 100 பெண் பன்றிகள், 25 ஆண் பன்றிகள் கொண்ட பண்ணை அமைக்க மொத்த திட்ட செலவில் மூலதனத்தில் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
தீவனம், தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில் மூலதனத்தில் 50 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்...
இந்த திட்டத்தின் கீழ் தனிநபர், சுய உதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டு பொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் தகுதியானவர்கள் ஆவர். முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். தொழில்முனைவோர் அல்லது தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதம், திட்ட மதிப்பீட்டிற்க்கான அங்கீகாரத்தினை பெற வேண்டும். இதில் பயன்பெற விரும்புவோர் https:/nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்கள் அறிய தங்கள் அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையம், வேலூர் என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.