கடலூர்
குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் உரம் அதிகாரி தகவல்
|குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் உரம் வழங்கப்படுவதாக காட்டுமன்னார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார்.
காட்டுமன்னார்கோவில்,
மானியத்தில் உரம்
தமிழக வேளாண் உழவர் நலத்துறை சார்பில் நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு யூரியா 45 கிலோ, டி.ஏ.பி. 50 கிலோ, மற்றும் பொட்டாஷ் 25 கிலோ உரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 1 ஏக்கர் வரை முழு மானியத்தில் உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டதில் பயனடைய விரும்பும் காட்டுமன்னர்கோவில் வட்டார காவிரி நீர் பாசன வசதி பெறும் கிராமங்களில் உள்ள விவசாயிகள் அந்தந்த கிராம நிா்வாக அலுவலரிடம் குறுவை சாகுபடி செய்யப்பட்டதற்கான அடங்கல் சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது நேரடியாகவோ வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ பதிவு செய்து கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு பிறகு உரம் பெறுவதற்கான ஒப்புதல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்படுகிறது.
சிறுதானிய பயிர்கள்
மேலும் குறுவை தொகுப்பு திட்டத்தில் நெற்பயிருக்கு மாற்றாக சிறுதானிய பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு விதைகள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து, உயிர் உரங்கள், இயற்கை உரம் ஆகிய செலவீனங்களுக்காக ரூ.1150, பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1740, எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்காக 80 கிலோ விதைகள் ரூ.4700 மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு காட்டுமன்னார்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது உதவி வேளாண் அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.