முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு இன்று ஆய்வு
|முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் இன்று (வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சென்னை,
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி ஆகும். இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் இன்று (வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொள்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையின் பிரதான அணை, பேபி அணை மதகுப்பகுதிகள், சுரங்கப்பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர். பருவமழை காலங்களில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, பாதுகாப்பு பணிகள் குறித்து துணை கண்காணிப்பு குழு ஆய்வு நடத்துகிறது.
தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவிபொறியாளர் குமார் ஆய்வில் பங்கேற்கின்றனர். 3 மாதங்களுக்கு பின் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.