சென்னை
லாரி சக்கரத்தில் சிக்கி சப்-இன்ஸ்பெக்டர் சாவு - டிரைவர் கைது
|காஞ்சீபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் ஓரிக்கை வேளிங்கபட்டரை தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 59). இவர் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை காஞ்சீபுரத்தில் இருந்து மோட்டா்சைக்கிளில் பணிக்காக சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சின்னயன்சத்திரம் என்ற இடத்தில் சென்ற போது, வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு லாரி கண்ணிமைக்கும் நேரத்தில், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் செல்லபிள்ளை மற்றும் போலீசார் விரைந்து சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சாமகுளத்தை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் (41) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.