< Back
மாநில செய்திகள்
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நிலத்தரகரை அரிவாளால் வெட்டிய சப்-இன்ஸ்பெக்டர் கைது
சென்னை
மாநில செய்திகள்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நிலத்தரகரை அரிவாளால் வெட்டிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

தினத்தந்தி
|
15 May 2023 6:34 AM IST

நிலம் விற்றதில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நிலத்தரகரை அரிவாளால் வெட்டிய சப்-இன்ஸ்பெக்டர், அவரது நண்பர்களுடன் கைதானார். படுகாயம் அடைந்த நிலத்தரகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

சென்னையை அடுத்த புழல் புத்தகரத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 43). நிலத்தரகரான இவருக்கு சொந்தமான இடம் புத்தகரம் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் புழல் காவாங்கரையை சேர்ந்த சீனிவாஸ் (வயது 45) என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நிலத்தகரகரான சதீசுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் இருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.

அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ், நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பர்களான புத்தகரத்தை சேர்ந்த திலீப் (35), ரூபன் (33), சரவணன் என்ற வெள்ளை சரவணன் (30), ஜெகன் (29) ஆகிய 4 பேருடன் சேர்ந்து புத்தகரம் சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்த சதீசை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சதீஷ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சதீஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது

இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நிலம் விற்றதில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நிலத்தரகரை நண்பர்களுடன் சேர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரே அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்