திருச்சி
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் அதிரடி கைது
|சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
காதல் ஜோடி
திருச்சி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக முக்கொம்பு சுற்றுலா மையம் விளங்குகிறது. இந்த சுற்றுலா மையத்திற்கு நேற்று முன்தினம் திருச்சி அரியமங்கலத்ைத சேர்ந்த 17 வயது சிறுமியும், அவருடைய காதலரும் வந்துள்ளனர். அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு முக்கொம்பு பூங்காவில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு ஜீயபுரம் போலீஸ் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் (வயது 28) மற்றும் போலீசார் பிரசாத் (26) சங்கர் ராஜபாண்டியன் (32), சித்தார்த்தன் (30) ஆகியோர், சங்கருக்கு சொந்தமான காரில் அங்கு வந்துள்ளனர். அவர்கள் கரைப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் 4 பேரும் சாதாரண உடையில் இருந்தனர். இதில் பிரசாத் நவல்பட்டு போலீஸ் நிலையத்திலும், சங்கர் ராஜபாண்டியன் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாகவும், சித்தார்த்தன் ஜீயபுரம் போக்குவரத்து போலீசிலும் பணியாற்றி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார். மேலும் சித்தார்த்தன் தற்போது விடுமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தல்
இந்நிலையில் கரைப்பகுதியில் அமர்ந்திருந்த காதலர் ஜோடி எல்லை மீறி, பொது இடத்தில் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட போலீசார், அங்கு சென்று காதல் ஜோடியை மிரட்டி, தனித்தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். இதில் அந்த சிறுமியை தாங்கள் வந்த காருக்கு அழைத்துச்சென்ற போலீசார், சிறிது நேரம் காரில் வைத்து அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, 'நாங்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும், என்று சிறுமியை மிரட்டி, அங்கிருந்து அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த 4 பேரும் போலீசார் தான் என்று அந்த சிறுமிக்கும், அவரது காதலருக்கும் முதலில் தெரியவில்லை.
பின்தொடர்ந்து வந்தனர்
இதையடுத்து சிறுமியும், அவரது காதலரும் அங்கிருந்து சென்று முக்கொம்பு நுழைவு பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரும் வந்தனர். அவர்கள் போலீசார் தான் என்பதை புறக்காவல் நிலைய போலீசார், அந்த காதல் ஜோடியிடம் கூறி உறுதிப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த காதல் ஜோடி அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
போலீசார் விசாரணை
மேலும் இந்த தகவல் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியவந்தது. அவர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க கூடுதல் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் நேரில் சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் அங்கு பொதுப்பணித்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சம்பவ நேரத்தில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வைத்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் திருச்சி மாநகர போலீசார் உதவியுடன் சிறுமியை கண்டுபிடித்து நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரை போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது.
போக்சோவில் கைது
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாரை பணி யிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன் உத்தர விட்டார். மேலும் போலீஸ்காரர்கள் பிரசாத், சித்தார்த்தன், சங்கர் ராஜபாண்டியன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார். மேலும் சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும் அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
2021-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்
கைதான சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கடந்த 2021-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் பயிற்சி முடித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்து உள்ளார். தற்போது அவர் தனிப்படையில் பணியை தொடர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதான பிரசாந்த், சித்தார்த்தன் ஆகியோர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிவாடி வச்சாணி முதலி தெருவை சேர்ந்தவர்கள் ஆவர். சங்கர் ராஜபாண்டியன் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆவார்.
பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரே சுற்றுலா மையத்தில் இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.