திருவள்ளூர்
மாநகராட்சி, பேரூராட்சிகள் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு; அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் பங்கேற்பு
|திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது.
திருவள்ளூர்,
கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி, பேரூராட்சிகள் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வு கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி பகுதியில் இருந்து தலைவர்கள், செயல் அலுவலர்கள், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
சுத்திகரிப்பு நிலையம்
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், நகராட்சி நிர்வாக இணை ஆணையர் விஷ்ணு சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், கோவிந்தராஜன், சந்திரன், தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி, திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய குப்பம் ஜே.என்.ரோடு பகுதியில் ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் நூலகம் கட்டிடப் பணிகளையும், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட சிவம்நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.