பெரம்பலூர்
சிப்காட்டில் காலணி பூங்கா கட்டுமான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு
|சிப்காட்டில் காலணி பூங்கா கட்டுமான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை திறந்து வைத்து, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் நேற்று எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில், பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஜின்னா ரபீக் அஹமது, தைவான் முதலீட்டாளர்கள் குழுத்தலைவர் கிரிஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலெக்டர் கூறுகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமையவுள்ள காலணி பூங்கா உள்ளிட்ட நிறுவனங்கள் அமைவதன் மூலம் அதிகளவிலான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலம் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அமைவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சி மேலும் உயர்நிலை அடையும். மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் பல்வேறு சிறு, குறு தொழில்கள் உருவாகி பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும், என்றார். முன்னதாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவினர்களை அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவ இன மக்கள் துளசி மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகத்தை கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் குழுவினர் மற்றும் தைவான் முதலீட்டாளர்கள் குழுவினர் சந்தித்து கட்டுமான பணிகள் முன்னேற்பாடுகள் குறித்து பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலந்துரையாடினார். இதில் தொழில்துறை வழிகாட்டி நிறுவன அலுவலர்கள், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உட்பட அரசுத்துறை அலுவலர் கலந்து கொண்டனர்.
---
Image1 File Name : P_SHANMUGAM_Staff_Reporter-15592471.jpg
----
Reporter : P.SHANMUGAM_Staff Reporter Location : Trichy - PERAMBALUR DEPOT