ராமநாதபுரம்
அரசு தொடக்கப்பள்ளியில் முதன்மை செயலாளர் ேநரில் ஆய்வு
|திருவாடானை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவர் கூடுதல் வகுப்பறைகளை கட்டி கொடுக்க உத்தரவிட்டார்.
தொண்டி,
திருவாடானை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவர் கூடுதல் வகுப்பறைகளை கட்டி கொடுக்க உத்தரவிட்டார்.
முதன்மை செயலாளர் ஆய்வு
திருவாடானை தாலுகாவில் ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் அரசு முதன்மைச் செயலாளருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் பழங்குளம் ஊராட்சி பஞ்சமாரி கிராமத்தில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணியை பார்ைவயிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாணிக்கங்கோட்டை கிராமத்தில் மணிமுத்தாற்றில் தரை பாலம் சேதமடைந்துள்ளதையொட்டி நபார்டு திட்டத்தின் கீழ் புதிதாக மேம்பாலம் கட்டப்பட உள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் சிறுமலை கோட்டை கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்த்தார். பின்னர் தளிர் மருங்கூர் ஊராட்சி விஸ்வநாதயேந்தல் கிராமத்தில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்குழாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இப்பகுதியில் உள்ள விஸ்வநாதயேந்தல், கூத்தனேந்தல் கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்றும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கூடுதல் வகுப்பறை கட்ட உத்தரவு
பின்னர் நம்புதாளையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்ற அவர் அங்கே மாணவர்கள் பலர் சீருடைகளும் பல மாணவர்கள் சீருடை இல்லாமல் இருப்பதை பார்த்து சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் ஏன் இந்த வேறுபாடு என கேட்டறிந்தார். அதற்கு அதிகாரிகள் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு மட்டுமே சீருடை வழங்கப்படுகிறது என தெரிவித்தனர். அப்போது மாணவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு மேஜை, நாற்காலிகள் ஏற்பாடு செய்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, மேகலா, வட்டார கல்வி அலுவலர் புல்லானி, ஊராட்சி தலைவர்கள் தளிமருங்கூர் ராமநாதன், நம்புதாளை பாண்டி செல்வி ஆறுமுகம், பழங்குளம் பார்த்திபன், சிறுமலைக்கோட்டை பஞ்சு ஆறுமுகம், காரங்காடு கார்மேல்மேரி செங்கோல் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் உடன் சென்றனர்.