கரூர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
|வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். மகேஸ்வரன் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 பணிகள் தொடர்பாக, கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் இடமாற்றம் செய்ய ஏதுவாக கடந்த மாதம் 12, 13-ந்தேதி மற்றும் 26, 27-ந்தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இச்சிறப்பு முகாமில் பெயர் சேர்க்காத 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்க்கவும் மற்றும் வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற 8-ந்தேதி வரை மனுக்கள் அளித்து பயன்பெறலாம். மேலும், 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17 வயது முடிவுற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் Online மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.nvsp.in, https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்கள் மற்றும் Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்றார். பின்னர் கரூர் வட்டம் தாந்தோணி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்த இளம் வாக்காளர் மற்றும் திருத்தம் மேற்கொண்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.