திருவண்ணாமலை
சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
|திருவண்ணாமலையில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலையில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
வருவாய்த்துறையின் மூலமாக சுதந்திர போராட்ட தியாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு விழா அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு விருந்தினர், தியாகிகள், அரசு அலுலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சுதந்திர தின விழா நிகழ்ச்சியினை அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் இருக்கை வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், கோப்பைகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்தல், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பென்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி கவுரவித்தல், விழா நடத்தும் ஆயுதப்படை மைதானம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
பட்டியல்
விழா மைதானத்திற்கு செல்லும் பாதையை செப்பனிடுதல், விழா மேடை மற்றும் கொடியேற்ற மேடையின் அருகே பூந்தொட்டிகளை கொண்டு அலங்கரித்தல் மற்றும் விழா நடைபெறும் திடலில் பொது மக்கள் உபயோகித்திற்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல் துறையின் மூலம் பயன் பெறும் பயனாளிகளின் பட்டியல் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பெற உள்ள அனைத்துத்துறை அலுவலர்களின் பட்டியல் வருகிற 7-ந் தேதி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், உதவி கலெக்டர்கள் மந்தாகினி (திருவண்ணாமலை), தனலட்சுமி (ஆரணி) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.