திருவண்ணாமலை
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம்
|10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
அப்போது 2021-22-ம் ஆண்டு 10 மற்றும் பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ்-2 ஆகிய வகுப்புகளில் முறையே 93.07 சதவீதம் மற்றும் 88.28 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை அளிக்க குழந்தைகள் உதவி மையம் 1098 மற்றும் 14417, மன நல ஆலோசகர் நாராயணன் - 9842981128, முதன்மை கல்வி அலுவலர் 9486437686, மாவட்ட கல்வி அலுவலர் - 9865179717 ஆகிய உதவி எண்கள் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி விகிதம் குறித்து ஒவ்வொரு பள்ளி வாரியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தினை இந்த கல்வி ஆண்டில் அதிகரிப்பது குறித்தும், தேர்ச்சி பெறாத ஒவ்வொரு மாணவ, மாணவியையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்தும் இந்த ஆய்வு கூட்டத்தின் மூலம் வாயிலாக கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கூட்டத்தில் பள்ளி கல்வி துறையினை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.