< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
18 Jun 2023 12:15 AM IST

பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பரமத்திவேலூர்

கலெக்டர் ஆய்வு

பரமத்தி ஊராட்சி ஒன்றியம், மாணிக்கநத்தம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-2023-ன் கீழ், ரூ.15.71 லட்சம் மதிப்பீட்டில் பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலை முதல் சூரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை சாலையை பலப்படுத்தும் பணியை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பரமத்தி வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், ரேஷன் கடையில் இருப்பிலுள்ள கோதுமை, அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட குடிமை பொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா என ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அர்த்தனாரிபாளையம் முதல் நாமக்கல் - வேலூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், வில்லிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18.99 லட்சத்தில் பாண்டியன் குட்டை வாய்க்காலை ஆழப்படுத்தி கரையை மேம்படுத்தும் பணியை அவர் பார்வையிட்டார். அப்போது பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வாரசந்தை கட்டும் பணி

வேலூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.147 லட்சத்தில் சந்தை பகுதியில் வார சந்தை கட்டும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட ஜே.ஜே. நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள், தாசில்தார் கலைச்செல்வி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்