நாமக்கல்
தும்பல்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு:முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
|ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு
நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளுக்குறிச்சி ஊராட்சி தும்பல்பட்டியில் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அதையொட்டி அங்குள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்டு இருந்த வாடிவாசல், ஜல்லிக்கட்டு வீரர்கள் வருவதற்கான பாதை அமைப்பையும் அவர் பார்வையிட்டார். மேலும் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழையாத வகையில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருப்பதையும் கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை கால்நடை பராமரிப்பு துறையினர் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக பந்தல் அமைக்கப்பட்டு உள்ள இடத்தையும், மருத்துவக் குழுவினர் அவசர சிகிச்சை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கு கலெக்டர் உமா அறிவுறுத்தினார்.
ஆலோசனை
பின்னர் அவர், விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் மற்றும் துறை அலுவலர்களுடன் ஜல்லிக்கட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது உதவி கலெக்டர் (பொறுப்பு) சுகந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) நடராஜன், ராசிபுரம் தாசில்தார் சுரேஷ், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.