நாமக்கல்
இலுப்புலி ஏரியில் படகு இல்லம் அமைச்சர் இடத்தை ஆய்வு
|எலச்சிபாளையம் இலுப்புலி ஏரியில் படகு இல்லம் அமையும் இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.
படகு இல்லம்
திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் இலுப்புலி ஏரியில் படகு இல்லம் அமைப்பது தொடர்பாக திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் மதிவேந்தன் இலுப்புலி ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இலுப்புலி ஏரியில் மொத்த பரப்பளவு குளிர் மற்றும் கோடை காலங்களில் படகு சவாரி வசதி ஏற்படுத்தினால் அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்வது, சுற்றுலா பயணிகள் வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவை குறித்தும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு
அப்போது அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:- தமிழகத்தில் சுற்றுலா துறையின் மூலம் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், பெரிதும் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த இலுப்புலி பகுதியில் 160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில், படகு சவாரி கொண்டு வருவது குறித்தும், படகு சவாரி மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது எலச்சிபாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தங்கவேல், செல்வராஜ், கொ.ம.தே.க. மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்ட தலைவர் சேன்யோ குமார், வருவாய் மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.