நாமக்கல்
திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
|மோகனூரில் திட்டப்பணிகளை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் ஆய்வு செய்தார்.
மோகனூர்
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், பேட்டபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கன்வாடி பணியாளர்களிடம் பரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
அங்கன்வாடி மையத்தில், அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களின் இருப்பு குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, கர்ப்பிணிகளுக்கு எடை பார்க்கும் கருவி, ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிப்பதற்கான எடை பார்க்கும் கருவி ஆகியவை இருப்பதை பார்வையிட்டு உறுதி செய்தார்.
தடுப்பூசி
தற்போது மகப்பேறு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை, பெயர் விவரம், அவர்களுக்கு அரசு அறிவுறுத்தியபடி குறித்த கால இடைவெளியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், தடுப்பூசி போட வேண்டிய குழந்தைகளின் விவரங்களையும், பதிவேடுகளை பார்வையிட்டு செவிலியரிடம் கேட்டறிந்தார்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் போது விரைந்து ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
திட்டப்பணிகள்
தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பனைமரத்துப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.20.85 லட்சம் மதிப்பில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, கலெக்டர் நேரில் பார்யைவிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பன், பேட்டப்பாளையம் ஊராட்சி செயலாளர் பரமசிவம், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.