சென்னை
ஸ்டுடியோ அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை: பழைய குற்றவாளி சிக்கினான்; ரூ.51 லட்சம் நகை-பணம் மீட்பு
|விருகம்பாக்கம் ஸ்டுடியோ அதிபர் வீட்டின் நடந்த கொள்ளை சம்பவ வழக்கில் பழைய குற்றவாளி சிக்கினான். அவனிடமிருந்து ரூ.51 லட்சம் நகை-பணம் மீட்கப்பட்டது.
விருகம்பாக்கம் குமரன் காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 65). இவர் சொந்தமாக ஸ்டுடியோ நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி பூட்டை உடைத்து வீட்டில் இருந்த தங்கம், வைரம் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்ட ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனதாக விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு, இணை போலீஸ் கமிஷனர் மனோகர், கோயம்பேடு துணை போலீஸ் கமிஷனர் குமார் ஆகியோர் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் எந்தவித துப்பும் கிடைக்காததால் கொள்ளை சம்பவம் நடந்த விதத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் பழைய குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் தூத்துக்குடி மாவட்டம், பேய் குளத்தை சேர்ந்த முத்து என்பது தெரியவந்தது. முத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரம், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 42 கிலோ எடையுள்ள வெள்ளிக்கட்டிகள் மற்றும் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மீட்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருடிய நகைகளை அடமானம் வைத்து மதுகுடித்து, அழகிகளுடன் உல்லாசமாக இருந்தும் செலவு செய்து வந்தது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே ஜெ.ஜெ.நகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொள்ளை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் போலீசாருக்கு சவால் விடும் வகையிலும் எந்தவித துப்பும் கிடைக்காத வகையில் கைரேகைகள் பதிவாகாமல் இருக்கும் வகையில் கொள்ளை அடிப்பதில் கில்லாடி. அதே யுக்தியை இந்த கொள்ளை சம்பவத்தில் கையாண்டிருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் முத்துவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த கொள்ளை சம்பவம் குறித்து 3 உதவி போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டது. புகார்தாரர் தரப்பில் ரூ.2 கோடியே 25 லட்சம் திருட்டு போனதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ரூ.51 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.