டியூசனுக்கு சென்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கோவையில் பரபரப்பு
|பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு தனது வீட்டில் வைத்து டியூசன் எடுத்து வந்தார். டியூசனுக்கு வரும் மாணவிகளை அவரது கணவரான மடிக்கணினி பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த 46 வயது நபர் தனது மோட்டார் சைக்கிளில் பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வருவது, வீட்டில் இருந்து அழைத்து செல்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் வீட்டில் இருக்கும்போதும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு செல்போனிலும் மாணவிகளை தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசி வந்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், கோவையில் உள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். மாணவிகளின் புகாரின் பேரில் வால்பாறை போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்து, ஆசிரியையின் கணவரை கைது செய்தனர்.
டியூசனுக்கு சென்ற மாணவிகளுக்கு ஆசிரியையின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.