பெரம்பலூர்
கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க சென்ற மாணவ-மாணவிகள்
|கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க மாணவ-மாணவிகள் சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழாவில் கவின் கலை, நுண்கலை, இசை, நடனம், நாடகம், கருவி இசை என்ற பல்வேறு பிரிவுகளில் 150 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் 2,233 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 429 மாணவ-மாணவிகள் தகுதி பெற்றனர். கோவை, காசீபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் கட்டமாக மதுரையில் நடைபெறும் போட்டிகளுக்கு 44 மாணவ, மாணவிகள் 10 ஆசிரியர்களுடனும், கோவையில் நடைபெறும் போட்டிகளுக்கு 55 மாணவ, மாணவிகள் 11 ஆசிரியர்களுடனும், திருவள்ளூரில் நடைபெறும் போட்டிகளுக்கு 24 மாணவ, மாணவிகள் 5 ஆசிரியர்களுடனும், காஞ்சீபுரத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு 3 மாணவ, மாணவிகள், 2 ஆசிரியர்களுடனும் என மொத்தம் 126 மாணவ-மாணவிகள் 28 ஆசிரியர்களுடன் போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களுக்கு தனித்தனி பஸ்களில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். அவர்களை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வாழ்த்தி வழியனுப்பினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தை ராஜன் (இடைநிலை கல்வி), அண்ணாதுரை (தொடக்க கல்வி), சண்முகசுந்தரம் (தனியார் பள்ளிகள்), உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.