ராமநாதபுரம்
விடுமுறை அறிவிப்பு வராததால் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள்
|ராமேசுவரத்தில் பலத்த மழை கொட்டியது. விடுமுறை அறிவிப்பு வராததால் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு விடுமுறை என அறிவித்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
ராமேசுவரத்தில் பலத்த மழை கொட்டியது. விடுமுறை அறிவிப்பு வராததால் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு விடுமுறை என அறிவித்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி அன்று தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகின்றது.இதனிடையே இலங்கையில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனிடையே நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய மழையானது சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையாகவே கொட்டி தீர்த்தது. அதன் பின்னர் மிதமான மழையாக மதியம் 1 மணி வரையிலும் பெய்தது. தொடர்ந்து மாலை வரை சாரல் மழையாகவே பெய்து கொண்டிருந்தது.
பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
ராமேசுவரத்தில் பெய்த பலத்த மழையால் கோவில் பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான ராம தீர்த்தம் முதல் லெட்சுமணத் தீர்த்தம் வரையிலான சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் தனுஷ்கோடி செல்லும் சாலை, கோவில் ரதவீதி செல்லும் சாலையிலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
மழையில் நனைந்த மாணவ-மாணவிகள்
காலை 8 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கிய நிலையிலும் பள்ளிகள் விடுமுறை குறித்து மாவட்ட கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு முன்னறிவிப்பும் வரவில்லை.
இதனால் நேற்று காலை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் பள்ளிகளுக்கு சென்றனர். பின்னர் பகலில் நல்ல மழை பெய்து கொண்டிருந்த போது திடீரென பல்வேறு பள்ளிகளில் 12 மணிக்கு பிறகு மழை காரணம் எனக்கூறி விடுமுறை அறிவித்தனர். அப்போதும் பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்றனர்.
முன்கூட்டியே அறிவிக்கலாம்
இது குறித்து ராமேசுவரம் புது ரோடு பகுதியைச் சேர்ந்த மாணவியின் தாய் விஜயா கூறியதாவது:-
தற்போது மழைக்கால சீசன் ஆக உள்ளது. இதனால் பள்ளி விடுமுறை அறிவிப்பு என்பது முன்கூட்டியே அறிவித்தால் மட்டுமே தான் அது மாணவர்களுக்கு ஒரு வசதியாக இருக்கும். மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்ற பின்பு பள்ளி விடுமுறை என கூறுவதால் எந்த ஒரு பயனும் கிடையாது. அதனால் மழை பெய்ய தொடங்கும் சூழ்நிலையை பொறுத்து முன்கூட்டியே இனியாவது பள்ளி விடுமுறை குறித்து முறையாக அறிவிப்பு செய்தால் மாணவ மாணவிகள் மழையில் நனையாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மழைநீர் அகற்றும் பணி
ராமேசுவரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீரை அகற்றும் பணியை நகராட்சி சேர்மன் நாசர் கான், ஆணையாளர் கண்ணன், சுகாதார அலுவலர் தியாகராஜன், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதே போல் தனுஷ்கோடி பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் முழுவதும் இடைவிடாமல் மிக பலத்த மழையாகவே பெய்தது. தனுஷ்கோடி பகுதியில் நேற்று பகல் முழுவதுமே கருமேகக் கூட்டங்களாக காட்சியளித்து மழை பெய்து கொண்டிருந்ததால் இரவு போல் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் தனுஷ்கோடி வந்த பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வந்து சென்றன.