ராமநாதபுரம்
பாடப்புத்தகம் வழங்காததால் மாணவிகள் அவதி
|பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாடப்புத்தகம் வழங்காததால் மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் ஆங்கில வழி கல்வி ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை.
பரமக்குடி,
பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாடப்புத்தகம் வழங்காததால் மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் ஆங்கில வழி கல்வி ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை.
ஆங்கில வழி கல்வி
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு பல திட்டங்களையும், சலுகைகளையும் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். அதேபோல் அரசு பள்ளிகளில் கல்வித்தரமும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பரமக்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர்.
குறிப்பாக கிராமப்புற மாணவிகளும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளும்தான் அதிக அளவில் படித்து வருகின்றனர். தமிழ் வழி கல்வி மட்டுமே உள்ள அந்த பள்ளியில் இந்த ஆண்டு முதல் முறையாக பிளஸ்-1 கணிதம் மற்றும் உயிரியல் பாடப்பிரிவு வகுப்பிற்கு ஆங்கில வழியில் படிப்பதற்கான வகுப்பு தொடங்கப்பட்டு மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது. 15 மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
ஆசிரியர் இல்லை
பள்ளி திறந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அந்த மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. மேலும் பாடம் சொல்லிக் கொடுக்க கூடிய ஆங்கில வழி ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். வேறு வழியின்றி தினமும் பள்ளிக்கூடத்துக்கு சென்று வீட்டுக்கு திரும்பி வருகின்றனர். கடந்த சில தினங்களாக மாணவிகள் தங்களின் நிலை குறித்து வீட்டில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர்.
மேலும் உடனடியாக பாடப்புத்தகங்கள் வழங்கி, ஆசிரியர் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
பெற்றோர்கள் கோரிக்கை
மேலும் ஆங்கில வழியில் சேர்ந்த மாணவிகள் பள்ளியை விட்டு விலகி விடுவோமா அல்லது தொடர்வோமா என முடிவு செய்ய முடியாமல் திணறுகின்றனராம். எனவே கல்வித்துறை அதிகாரிகளும், தமிழக அரசும் இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புத்தகங்களை வழங்கி, ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என மாணவிகளும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பாலமுத்துவிடம் கேட்டபோது, கூடுதலாக புத்தகங்கள் வராததால் மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க முடியவில்லை. மேலும் வேதியியல் ஆசிரியர் இல்லை.
தகுந்த ஆசிரியர்களை தேடி வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.