< Back
மாநில செய்திகள்
பள்ளிகளில் தண்ணீர் புகுந்ததால் மாணவ-மாணவிகள் அவதி
வேலூர்
மாநில செய்திகள்

பள்ளிகளில் தண்ணீர் புகுந்ததால் மாணவ-மாணவிகள் அவதி

தினத்தந்தி
|
25 Sept 2023 11:18 PM IST

வேலூர் முள்ளிப்பாளையத்தில் பள்ளிகளில் தண்ணீர் புகுந்ததால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர். அவர்கள் கோவில் மற்றும் தேவாலயத்தில் அமர வைக்கப்பட்டு பாடம் பயின்றனர்.

குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்

வேலூரில் கடந்த 2 நாட்களாக இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.

வேலூர் முள்ளிப்பாளையம் அவ்லியாஷா தர்கா தெருவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சாலை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

முழங்கால் அளவு தண்ணீரில் வெளியே வந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோவிலில் பாடம்

மேலும் அந்த பகுதியில் இயங்கி வரும் பாரதி நிதியுதவி தொடக்கப்பள்ளியிலும், ஜனசக்தி நிதியுதவி நடுநிலைப்பள்ளியிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் செல்ல முடியாத நிலையும், வகுப்புகளும் நடத்த முடியாத நிலையும் இருந்தது. இதனால் அவர்கள் அவதியடைந்தனர்.

பின்னர் தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவ- மாணவிகளை அங்குள்ள கே.கே.நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், ஓம்சக்தி கோவில்களுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று பாடம் எடுத்தனர். ஒரு கோவிலில் 1 முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளும், மற்றொரு கோவிலில் 4,5-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் பாடம் எடுக்கப்பட்டது.

இதேபோல நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளும் அங்குள்ள தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் போதெல்லாம் இப்பகுதி வெள்ளத்தால் சூழப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். தொடக்கப்பள்ளி அருகே சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. விபரீதம் ஏற்படும் முன்பு இதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.

குடியாத்தத்தில் அதிகபட்சம்

வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக முள்ளிப்பாளையம், கன்சால்பேட்டை, சத்துவாச்சாரி வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. வசந்தம் நகரில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி நேற்றும் தொடர்ந்து நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையில் அதிகபட்சமாக குடியாத்தத்தில் 118.4 மில்லி மீட்டர் அளவு பதிவானது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

பொன்னை- 7.6, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதி- 10.2, மோர்தானா அணைப்பகுதி- 18, ராஜாதோப்பு அணைப்பகுதி- 26, வேலூர் வேலப்பாடி- 33.4, கலெக்டர் அலுவலகம்- 42.9, பேரணாம்பட்டு- 48.6, காட்பாடி- 55, விரிஞ்சிபுரம்- 62.8, மேல் ஆலத்தூர்- 104.2.

மேலும் செய்திகள்