அரியலூர்
வேளாண்மை அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் அவதி
|ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை அறிவியல் பாடப்பிரிவில் ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் அவதி அடைவதாக பெற்றோர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் அளித்த மனுவில், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சியில் 1996-ம் ஆண்டு முதல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு இப்பள்ளி மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டது. தற்போது 936 மாணவ-மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
வேறு பள்ளியில்...
இந்நிலையில் 11-ம் வகுப்பில் வேளாண்மை அறிவியல் பாடப்பிரிவில் 45 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெறயுள்ள நிலையில், தற்போது ஆசிரியர் இல்லை என கூறி வேளாண்மை அறிவியல் பாட வகுப்பை கலைக்க உள்ளதால் வேறு பாடப்பிரிவில் சேர்ந்து கொள்ளவும் அல்லது வேறு பள்ளியில் சேர்ந்து கொள்ள ஆசிரியர்கள் பெற்றோரிடம் கூறுகின்றனர். 12-ம் வகுப்பில் அதே பாடப்பிரிவில் ஆசிரியர் இருக்கும்போது வகுப்பு நடைபெறுகிறது. எனவே இந்த ஆசிரியரை கொண்டு பாடம் நடத்தாமல் 11-ம் வகுப்பை பாதியில் கலைப்பது எந்த விதத்தில் நியாயம். எனவே தொடர்ந்து அந்த பாடப்பிரிவு செயல்பட வேண்டும்.
ஏலாக்குறிச்சியை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமப்புரங்கள் விவசாய பகுதிகளே. எனவே தங்கள் பிள்ளைகள் வேளாண்மை அறிவியல் பாடத்தை தொடர்ந்து நடத்த ஆவனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட மாநிலத்தில் விவசாய சம்பந்தமான படிப்பை அழிப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.
ரவுண்டானா அமைக்க வேண்டும்
அரியலூர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், அரியலூர் புறவழிச்சாலையில் அம்மாகுளம் பிரவு சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் பல மனித உயிர்கள் பலியாகின்றன. எனவே இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும் ரவுண்டானா அமைத்து தர வேண்டும். மேலும் இப்பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க உள்ளதாக தெரிய வருகிறது. சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா, கல்லக்குறிச்சி ரவுண்டானா, செந்துறை ரோடு ரவுண்டனா ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.