< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் சைவ, வைணவ புத்தகங்கள் இருப்பு இல்லாததால் மாணவர்கள் தவிப்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் சைவ, வைணவ புத்தகங்கள் இருப்பு இல்லாததால் மாணவர்கள் தவிப்பு

தினத்தந்தி
|
23 Jun 2022 10:29 PM IST

பழனி முருகன் கோவிலில் சைவ, வைணவ புத்தகங்கள் இருப்பு இல்லாததால் மாணவர்கள் தவித்து வருகின்றனர்/

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் (டி.என்.பி.எஸ்.சி.), இந்துசமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வில் சைவ, வைணவ மற்றும் இந்து சமயம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இதையொட்டி போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்து சமயம் சார்ந்த புத்தகங்களை வாங்கி படிப்பார்கள். குறிப்பாக சைவ, வைணவ மற்றும் இந்து சமயம் சார்ந்த புத்தகங்கள், பழனி முருகன் கோவில் சார்பில் வெளியிடப்படுகிறது. இதற்காக கோவிலில் புத்தக நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்துசமய அறநிலையத்துறை சார்ந்த பணிக்கு செல்லும் மாணவர்கள் பழனிக்கு வந்து, இந்த புத்தகங்களை வாங்கி செல்வார்கள். இதேபோல் கோவிலுக்கு வரும் ஆன்மிகவாதிகள், பக்தர்களும் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தற்போது இந்துசமய அறநிலைய துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி மாணவர்கள் அந்த தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் இந்து சமயம் சார்ந்த புத்தகங்களை வாங்கி அவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் உள்ள புத்தக நிலையத்தில் இந்து மதம் சார்ந்த புத்தகங்களை வாங்குவதற்காக மாணவர்கள் சென்றனர். அப்போது புத்தக நிலைய ஊழியர்கள், புத்தகங்கள் இருப்பு இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, பழனி முருகன் கோவிலில் போதிய புத்தகங்கள் இருப்பு இல்லை. புதிய புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அவை புத்தக நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றனர்.


Related Tags :
மேலும் செய்திகள்