காஞ்சிபுரம்
சென்னகுப்பம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நின்று செல்லாததால் மாணவ-மாணவிகள் அவதி
|சென்னகுப்பம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நின்று செல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
நிறுத்தத்தில் நிற்காத பஸ்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சென்னகுப்பம் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் அரசு பஸ் தடம் எண். 82 சி. சென்னகுப்பம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படுவது இல்லை.
அந்த பஸ் ஒரகடம் பஸ் நிறுத்தத்தில்தான் நிற்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவர்கள் அந்த வழியாக செல்லும் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களை சைகை காட்டி வழிமறித்து லிப்ட் கேட்டு ஏறி செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது.
கோரிக்கை
இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் சென்னகுப்பம் போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்கோ அல்லது அவசர உதவிக்கு வந்து புகார் கொடுக்கும் பெண்கள், முதியவர்கள் பஸ் வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே மாணவர்களின் நலன் கருதி சென்னகுப்பம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நின்று செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட வேண்டும் என்று ஆதிதிராவிடர் நல அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.