திண்டுக்கல்
அய்யலூர் அருகே சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
|அய்யலூர் அருகே சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
அய்யலூர் அருகே சுக்காவளி, கணவாய்பட்டி, களத்துப்பட்டி, செங்குளத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அய்யலூர் செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லை.
இதனால் அந்த பகுதியில் உள்ள கொல்லன்குளம் வழியே செல்லும் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களும் இந்த மண் பாதை வழியே தான் தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து கிணத்துப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மண் பாதை சேறும், சகதியுமாக மாறிவிட்டது.
இருப்பினும் வேறு சாலை இல்லாததால் பள்ளி மாணவர்கள் சேறும், சகதியுமான பாதையில் நடந்து, பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி கிணத்துப்பட்டி, சுக்காவளி இடையே தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.