திருப்பூர்
நிலத்தை அளவீடு செய்து தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு
|பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கியும் நிலத்தை அளவீடு செய்து தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால் மாணவ-மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி 2017-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு போதிய கட்டிடம் இல்லாததால் புதிய கட்டிடம் கட்ட பொன்நகர் பகுதியில் உள்ள இட்டேரிப் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளி கல்வித்துறைக்கு நில மாற்றம் செய்யப்பட்டது.
இங்கு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நபார்டு வங்கி ஒரு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஓராண்டு ஆகிவிட்டது. அந்த இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து தருமாறு தலைமையாசிரியரிடம் கடிதம் கொடுத்துள்ளார். மேலும் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தாசில்தார் ஆகியோரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நிலம் அளவீடு செய்வதில் இழுத்தடிப்பு
பல்லடம் தாசில்தாரிடம் நிலத்தை அளவீடு செய்து தருமாறு மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தனிடம் 19-6-2023 அன்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் மற்றும் கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் கவுரி ஆகியோரின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுவரைக்கும் நிலத்தை அளவீடு செய்து தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகிறார்கள். இதனால் பள்ளிக்கு ஒதுக்கிய நிதி ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவ- மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் திறந்த வெளியில் வகுப்புகள் நடைபெற்று வருவதால் மாணவ-மாணவிகளின் கற்றல், கற்பித்தல் பாதிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் நடவடிக்கை
எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி உடனடியாக பள்ளிக்கு ஒதுக்கிய நிலத்தை அளவீடு செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை, என்றால் சாலை மறியல் செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.