< Back
மாநில செய்திகள்
புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் இப்போதே தொடங்க வேண்டும்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் இப்போதே தொடங்க வேண்டும்

தினத்தந்தி
|
15 July 2023 2:20 AM IST

புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் இப்போதே தொடங்க வேண்டும் என தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் இப்போதே தொடங்க வேண்டும் என தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

புத்தக திருவிழா தொடங்கியது

தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நேற்று காலை தொடங்கியது. தொடக்கவிழாவுக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலை வகித்தார். புத்தக திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பள்ளி, கல்லூரி மாணவர்கள் புத்தகங்களை வாங்கி வாசிப்பு பழக்கத்தை இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. பக்கங்கள் அதிகம் கொண்ட புத்தகமாக இருந்தால் 2 பக்கங்களை படித்தவுடன் வைத்து விடுவார்கள். அதனால் முதலில் 20 பக்கங்கள் கொண்ட புத்தகங்களை படிக்க வேண்டும். மாதத்திற்கு 4 புத்தகங்கள் படிக்க வேண்டும்.

புத்தக வாசிப்பு பழக்கம்

மாணவ பருவத்தில் படிப்பதன் மூலம் வயதான காலத்திலும் மறக்காமல் நினைவில் இருக்கும். எனவே மாணவ-மாணவிகள் புத்தக வாசிப்பு பழக்கத்தை இப்போதே தொடங்க வேண்டும். குடும்பத்தினருடன் புத்தக திருவிழாவுக்கு வந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர்கள் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சித்ரா, வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) பழனிவேலு, சுற்றுலா ஆலோசகர் ராஜசேகர், சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா வளர்ச்சி குழும உறுப்பினர் முத்துக்குமார், பபாசி செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் நாளிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

110 அரங்குகள்

இந்த புத்தக திருவிழா வருகிற 24-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், சரசுவதி மகால் நூலகம், 'தினத்தந்தி' உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் 110 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் அருகில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் பெயரில் பாரம்பரிய உணவு வகைகள் கொண்ட உணவு திருவிழாவும் தொடங்கப்பட்டுள்ளது. புத்தக திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தினமும் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்