< Back
மாநில செய்திகள்
மாணவர்கள் எதிர்கால இலக்கினை நிர்ணயித்து செயல்பட வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

மாணவர்கள் எதிர்கால இலக்கினை நிர்ணயித்து செயல்பட வேண்டும்

தினத்தந்தி
|
11 Dec 2022 12:40 AM IST

எதிர்கால இலக்கினை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.


எதிர்கால இலக்கினை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாவட்ட கல்வி துறை சார்பில் வணிகவரித்துறையில் மேற்படிப்பு தொடர்பான வணிகவரித்துறை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கலெக்டர் மேகநாத ரெட்டி கூறியதாவது:-

இந்திய அளவில் தணிக்கையாளர் தேவை அதிகமாக உள்ளது. எனவே டாக்டர்களை போல தணிக்கையாளர்கள் தேவை அதிகரிப்பதால் வணிகவியல் ஆசிரியர்களான நீங்கள் வேலை வாய்ப்புகள் தொடர்பாக மாணவ- மாணவிகளுக்கு எடுத்து கூறி அவர்களது எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பள்ளி படிப்பின் போது மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர், ஆசிரியர்களை சார்ந்திருந்தீர்கள்.

நான் முதல்வன் திட்டம்

ஆனால் உயர்கல்வியில் நீங்கள் பெரும் வெற்றி தோல்விக்கு நீங்களே பொறுப்பு. மாணவர்கள் வாழ்க்கையில் 3 முக்கியமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று நீங்கள் கல்வி பயிலும்போது உங்களுக்கான எதிர்கால இலக்கினை நிர்ணயித்து செயல்பட வேண்டும். மற்றொன்று வாழ்க்கையில் பொருளாதார மேலாண்மையை கடைப்பிடித்து வாழ வேண்டும். அடுத்து தங்களுடைய வாழ்க்கை துணையை சரியான நேரத்தில் சரியான வழியில் தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் அடுத்து என்ன படிப்பது என்று அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

வெற்றி பெற வேண்டும்

எனவே மாணவ-மாணவிகள் தங்களுக்கு பிடித்தமான பாடத்தை தேர்ந்தெடு்க்க உதவியாக இருக்கிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். எனவே இங்கு வந்துள்ள அனைத்து ஆசிரியர்களும் இதை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்