கள்ளக்குறிச்சி
மாணவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
|கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (2022-2023) -ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே, மாணவர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்ற மாணவர்களில் பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. அந்த மாணவர்கள் தங்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும். வங்கி கணக்கு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புதியதாக கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் அஞ்சல் அலுவலகத்தில் வங்கி கணக்கு எண் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி வங்கி கணக்கு எண் தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.