அரசு பள்ளி கதவை பூட்டி மாணவ-மாணவிகள் போராட்டம்
|கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறி, அரசு பள்ளி கதவை பூட்டி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை பாய்கிறது.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிழவிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக நீலா ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியையும், ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் பஞ்சாயத்து தலைவி வள்ளியம்மாள் தலைமையில் மாணவ-மாணவிகளுடன் பள்ளிக்கூடத்தின் முன்பாக திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளிக்கூட நுழைவுவாயில் கதவையும் பூட்டினர்.
இதனால் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியவில்லை. உடனே நாலாட்டின்புத்தூர் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
பேச்சுவார்த்தை
தொடர்ந்து கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு அந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது பள்ளிக்கூட கழிவறையை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு தெரிவித்தார்.
வெறிச்சோடிய வகுப்புகள்
எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்தால்தான் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவோம் என்று கூறினர். மேலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இதனால் நேற்று பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடைபெறாமல் வெறிச்சோடியது.