அரியலூர்
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர்
|பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் யோகாசனங்களை செய்தனர்.
யோகாசன செய்முறை பயிற்சிகள்
சர்வதேச 9-வது யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று யோகாசன செய்முறை பயிற்சிகள் நடந்தது. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், கல்லூரிகளில் யோகா ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு யோகாசனங்களையும், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளையும் செய்து காண்பித்தனர். அதனை பின்தொடர்ந்து மாணவ-மாணவிகள் செய்தனர்.
கிராம ஊராட்சிகளில்...
இதேபோல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சர்வதேச யோகாசனம் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர். பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் தலைமையில் ஏனைய நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பணியாளர்கள் யோகாசனங்களை செய்தனர். அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்ற யோகா தின விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டு யோகாசனத்தை தொடக்கி வைத்து பேசினார்.