பெரம்பலூர்
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கூடுதல் பஸ் வசதி கேட்டு சாலை மறியல்
|பெரம்பலூர் அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால் கல்லூரிக்கு வந்து செல்வதற்கு போதிய அளவு அரசு டவுன் பஸ் வசதி இல்லை. மேலும் அந்த வழியாக ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் அந்த பஸ்களில் ஏறி பயணம் செய்ய முடியவில்லை. மீறி ஏறினாலும் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதனால் இலவச பஸ் பாஸ் இருந்தும் மாணவ-மாணவிகள் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு சென்று வர வேண்டியிருக்கிறது. லிப்ட் கிடைக்காத சில மாணவ-மாணவிகள் நடந்தும் செல்கின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று காலை 9 மணியளவில் திடீரென்று செஞ்சேரி-செட்டிகுளம் சாலையில் கல்லூரி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின. அப்போது அவர்கள் கல்லூரி தொடங்கும், முடியும் நேரத்திலாவது கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்கக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து கல்லூரிக்குள் சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்து பாதிப்பை ஒழுங்குப்படுத்தினர்.
உள்ளிருப்பு போராட்டம்
மேலும் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வருவதாக அறிந்த மாணவர்கள் அவரை சந்தித்து இது தொடர்பாக பேச வேண்டும் என்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கல்லூரி முதல்வர் முகேஷ்குமார் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் தங்களது வகுப்புகளுக்கு சென்றனர்.