கரூர்
கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
|கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மாணவர்களும் பிளஸ்-2 படிப்பை முடித்து கொண்டு கல்லூரிகளில் கால் எடுத்து வைக்கையில் என்ன படிப்பு படிக்கலாம்? எந்தப்பிரிவில் சேர்ந்து படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்? என்பன போன்ற எந்த விவரமும் எல்லா மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிகம் தெரிவது இல்லை.
இதனால் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் விரும்பும் பாடப்பிரிவில் அல்லது தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்த்து விடுகின்றனர்.
இந்தநிலையில் எந்தப் பாடப்பிரிவு எடுத்துப் படித்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்பது குறித்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
நான் முதல்வன் திட்டம்
கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர்:- கரூர் அரசு கலைக்கல்லூரியில் 1,280 இடங்களுக்கு 7,444 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அனைத்து துறைகளிலுமே விண்ணப்பங்கள் அதிகமாக தான் வந்துள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்று சிறந்த முறையில் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இதனால் அரசு கலைக்கல்லூரிகளின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகமாகத்தான் உள்ளது. பொறியியல் கல்லூரிகளை போல் தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கல்லூரிகள் மூலமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
தமிழக அரசின் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு 3 மாதம் பயிற்சி அளித்து, அதன் முடிவில் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குகிறார்கள். மேலும் அந்த மாணவர்களுக்கென வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறார்கள். இதனால் கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த காலத்தை விட வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.
குறைவான கட்டணம்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்தில் வரக்கூடிய கோல்டு, சில்வர் பதக்கங்கள், சிறந்த ரேங்கிங் ஆகியவற்றை மாணவர்கள் பெற்று வருகிறார்கள். இதனால் கரூர் அரசு கலைக்கல்லூரிக்கு உரிய முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அரசு கல்லூரிகளில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் இருக்கிறார்கள். இதனால் மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கிறது. அரசு கலைக்கல்லூரிகளில் குறைவான கட்டணம் தான் வாங்கப்படுகிறது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைகிறார்கள். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள். இதனால் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ், ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதில் தமிழ் வழிக்கல்வியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதனாலும் மாணவர்கள் அதிகளவில் சேருகிறார்கள். மேலும் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் கரூர் அரசு கலைக்கல்லூரியில் என்.சி.சி., என்.எஸ்.எஸ். உள்ளிட்டவைகள் மூலம் மாணவர்கள் தலைமை பண்பினை வளர்த்து கொள்கிறார்கள். வகுப்பறையில் கல்வி அறிவையும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மூலம் தலைமை பண்பினையும் வளர்த்து கொள்கிறார்கள். இதனால் கல்லூரியை முடித்து வெளியே செல்லும் போது வேலைவாய்ப்புக்கு தகுதி உள்ளவர்களாக செல்வது எங்களுக்கும் சந்தோஷம். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அதிகளவிலான மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள்.
விழிப்புணர்வு
மணவாடி அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியை உமா:- இன்றைய மாணவர்களிடம் என்ஜினீயர் அல்லது டாக்டராக வரவேண்டும் என்ற எண்ணம் மெதுவாக மாறிக்கொண்டே வருகிறது. தற்போது கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சேர்ந்து படித்து வருகின்றனர். அதிக பணம் செலவழித்து பிற படிப்புகளை படித்து வேலை இல்லாமல் இருப்பதற்கு பதிலாக, குறைந்த கட்டணத்தில் சரியான படிப்பை தேர்ந்தெடுத்து பிடித்த வேலையில் சேர்ந்து அதிக சம்பளம் பெறலாம். கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இன்று மாணவர்கள் மத்திய, மாநில அரசு தேர்வுக்கு தயாராவதற்கு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த படிப்பை எடுத்தாலும் சரி அதனை விருப்பத்தோடும், முழு ஈடுபாட்டுடனும் படித்தாலே நல்லவேலை கிடைக்கும். வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
வரப்பிரசாதம்
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி இணை பேராசிரியர் வைரமூர்த்தி:- என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற படிப்புகளை படித்து முடித்து வேலைக்கு செல்ல 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் கலை, அறிவியல் பாடங்கள் படிக்க 3 ஆண்டுகளே ஆவதால், குறைந்த ஆண்டில் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்ல முடியும் என்பதால் மாணவர்கள் பலர் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்கின்றனர். போட்டித்தேர்வுகளில் பங்கேற்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு இருந்தால் மட்டும் போதும் என்பதால் எளிமையான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் சேர்கின்றனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போன்றவற்றில் கலை, அறிவியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அரசு பணிகளை தேர்வு செய்ய கலை, அறிவியல் பட்டப்படிப்பு ஒரு வரப்பிரசாதமாக இருப்பதால் இந்த பாடப்பிரிவுகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேலை வாய்ப்பு
நொய்யலை சேர்ந்த பிளஸ்-2 முடித்த ஹரீஸ்:- பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் போது அதிக பணம் செலவாகும். வசதி இல்லாதவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது கடினம். இதேபோல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து தனக்கு பிடித்த பாடப்பிரிவுகளை எடுத்து படித்தால் மாணவ- மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவ- மாணவிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் சேர்ந்து படித்து வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த கட்டணத்தில் படித்து முன்னேற வாய்ப்பு உள்ளது. உயர் பதவிகளுக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தால் எளிதாக போகலாம். பெற்றோர்களுக்கும் செலவு மிச்சம். வேலை வாய்ப்பு கிடைப்பது உறுதி. எனவே என்னை போன்ற மாணவ-மாணவிகள் கலை, அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டுகிறோம்.
ஏராளமான பாடப்பிரிவுகள்
மண்மங்கலம் பகுதியை சேர்ந்த பூரண சந்திரா:- நான் பிளஸ்-2 முடித்துள்ளேன். பொறியியல் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும். பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தாலும் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதிக பணம் செலவழித்து பொறியியல் கல்லூரியில் படிப்பதை காட்டிலும் மிகவும் குறைந்த கட்டணத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்பது என்னுடைய ஆசை. அதேபோல் கலை, அறிவியல் கல்லூரியில் ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளன. அதுவும் நமக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய பாடப்பிரிவுகளாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் நிறைவான பாடங்களை படிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றாலே ஏதோ ஒரு வேலைக்கு சென்று விடலாம். இதனால் நான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளேன்.
மதிப்பெண் குறைந்த மாணவர்கள்
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள அய்யர்மலை பகுதியை சேர்ந்த ரிஷபவர்த்தினி:- படித்து முடித்தவுடன் விரைவில் வேலைக்கு செல்ல வாய்ப்பு அதிகம் உள்ள கலை, அறிவியல் படிப்புகளை மாணவ-மாணவிகள் தேர்வு செய்கின்றனர். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் பலர் இது போன்ற கல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர். மதிப்பெண்கள் குறைவாக எடுத்துள்ள மாணவ-மாணவிகளும் கலை, அறிவியல் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர். அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகளை படிப்பதால் பிற்காலத்தில் அதற்கு அதிக பலன் உள்ளது என்ற காரணத்தாலும், கணினி பயன்பாடு என்பது இக்காலத்தில் அதிகளவு இருப்பதால் நான் அந்த துறை சார்ந்த பட்டப் படிப்பை தேர்வு செய்துள்ளேன். ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிக கட்டணம் செலுத்தி படிக்க இயலாத காரணத்தால் கலை, அறிவியல் பாடங்களை தேர்வு செய்து பெரும்பாலும் அரசு கல்லூரிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பி.காம் ஆர்வம்
தோகைமலை அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்த அஜய்:- நான் திருச்சி தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு சேர்ந்து உள்ளேன். வங்கி மேலாளர், வங்கி உதவி மேலாளர், சமூக தணிக்கை, தனியார் கம்பெனி நிறுவனங்களில் மேலாளர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த படிப்பு பயனுள்ளதாக இருக்கும். படிப்பிற்கு பிறகு வணிகம் செய்வதாக இருந்தாலும் மார்க்கெட்டிங் நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக நுகர்வோர்கள் மற்றும் சரக்குகளை கையாள்வது போன்ற விஷயங்களையும் பி.காம் படிப்பு படிப்பதின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதனால் என்னை போன்ற மாணவர்கள் பி.காம் படிக்க அதிக ஆர்வமாக உள்ளனர்.
கல்வி உதவித்தொகை
பெற்றோர் தரப்பில் புகழூரை சேர்ந்த நல்லசாமி:- கடந்த காலங்களில் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படிப்பதையே மாணவ- மாணவிகள் விருப்பப்பட்டனர். அதேபோல் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு அதிகளவில் கிடைத்தது. அந்த நிலை தற்போது மாறி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய,புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்பட்டு அந்தப்பாடங்களில் படித்து அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்கிறார்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மிக குறைந்த கட்டணமே வசூல் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும்போது 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையே நாடி செல்கின்றனர்.
2 மடங்கு மாணவர்கள்
கல்வித்துறை உயர் அதிகாரிகள்:- தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த மாதம் 8-ந்தேதி வெளியான நிலையில், அன்றிலிருந்து மே 19-ந்தேதி வரை கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் மூலம் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி 3 லட்சத்து 14 ஆயிரத்து 66 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், இணையதளம் மூலமாகவும் தங்களது தரவரிசையை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 679 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கடந்த மாதம் 5-ந்தேதியில் இருந்து கடந்த 4-ந்தேதி வரை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பித்த 1 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் கல்லூரிகளை விட, கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 2 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.