திருச்சி
பஸ் படிக்கட்டுகளில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம்
|பஸ் படிக்கட்டுகளில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
படிக்கட்டுகளில் தொங்கியவாறு...
பஸ்களில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பதும், அப்போது சில மாணவர்கள் கீழே விழுந்து பலத்த காயமடையும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதனால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது.
ஆபத்தான பயணம்
இந்நிலையில் முசிறியில் இருந்து காட்டுப்புத்தூர் வரை செல்லும் டவுன் பஸ்களில் பெரும்பாலான மாணவர்கள் பயணம் செய்து பள்ளிக்குச் செல்கின்றனர். இதில் சில மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களில் சிலர் இவ்வாறு படிக்கட்டுகளில் தொங்கியவாறு செல்லும் நிலை உள்ளது. பள்ளிகளில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள் தெரிவித்திருந்த போதிலும், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்ப்பதில்லை. தொட்டியத்தில் இருந்து பாலசமுத்திரம், நத்தம் ஆகிய ஊர்களிலும் மாணவர்கள் டவுன் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணத்தையே மேற்கொள்கின்றனர்.
தடுக்க வேண்டும்
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இளங்கன்று பயமறியாது என்பதை போன்று பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதை வழக்கமாகவும், அதை பெருமையாகவும் நினைத்து செல்கின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் மாணவர்கள், பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு செல்வது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை தொடராமல் தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.