அரியலூர்
அடிப்படை வசதி மேற்கொள்ள மாணவிகள் கோரிக்கை: பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி விடுதியில் அமைச்சர் ஆய்வு
|அடிப்படை வசதி மேற்கொள்ள மாணவிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி விடுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் 21 வளர்ச்சி பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பொன்பரப்பியில் அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவிகள் அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் விடுதியில் கழிப்பிட வசதி, குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதனை உடனடியாக சரி செய்து தரவேண்டும். இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் சிவசங்கர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குரங்குகள் உள்ளே வராமல் இருக்க வலை அடித்து தரவும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் குடிநீர் வசதிக்கு ஆழ்குழாய் கிணறு தனது சொந்த பணத்தில் இருந்து செய்து தரப்படும் என உறுதியளித்தார். இதனால் விடுதி மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து அமைச்சருக்கு நன்றியை தெரிவித்தனர்.