திருவள்ளூர்
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
|திருவள்ளூர்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 94 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். 9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதற்கு 10.8.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கணினி வழித்தேர்வு செப்டம்பர் 29-ந் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமானச் சான்றிதழ், மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https;//yet.nta.ac.in, https;//socialjustice.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.