திருச்சி
மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
|மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீரங்கம் மேலூரில் அய்யனார் மாநகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 240 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் இட வசதி கருதி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான உயர் நிலைப்பள்ளியை மேலூரில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலூர் பொதுமக்களும், மாணவர்களும் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் பள்ளி இடமாற்றம் செய்வதை அதிகாரிகள் கைவிட்டனர். இந்நிலையில் மீண்டும் பள்ளி இடமாற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதையடுத்து 100-க்கணக்கான மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் இப்பள்ளி இடமாற்றம் செய்யப்படாது என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.