தேனி
மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
|தேனி கம்மவார் சங்க பொன்விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கம்மவார் சங்க பொன்விழா
தேனி கம்மவார் சங்கம் பொன்விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பொன்விழா கொண்டாட்டம் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கல்வி வளாகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நடக்கிறது.
விழாவில், கோவை பி.எஸ்.ஜி. அன் சன்ஸ் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கவுரவ தலைவர் நம்பெருமாள்சாமி, கோவை கே.ஜி. மருத்துவமனை சேர்மன் பக்தவச்சலம், சென்னை முன்னாள் மாநில தகவல் ஆணையர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசுகின்றனர். பொன் விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் மற்றும் கம்மவார் சங்க கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
பொன்விழாவையொட்டி தேனி கம்மவார் சங்கம் சார்பில் தேனியில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினிமாரத்தான் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தொடங்கி வைத்தார்.
இதில் கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் என்.ஆர்.டி. சாலை, பெரியகுளம் சாலை, நேரு சிலை சிக்னல், மதுரை சாலை, பங்களாமேடு, பாரஸ்ட்ரோடு வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
கலந்துகொண்டவர்கள்
இதில், தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி, உபதலைவர் பொன்ராஜ், இணைச்செயலாளர் மகேஷ், பொருளாளர் ரெங்கராஜ் என்ற கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, ராமமூர்த்தி, கிருஷ்ணசாமி, நவநீதன், நம்பெருமாள்சாமி, ஸ்ரீதர், ரவிச்சந்திரன், சீனிவாசராகவன், ஸ்ரீதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.