புதுக்கோட்டை
நேரலையில் பார்த்து மாணவ-மாணவிகள் உற்சாகம்
|நிலவில் சந்திரயான்-3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை புதுக்கோட்டையில் நேரலையில் மாணவ-மாணவிகள் பார்த்து உற்சாகமடைந்தனர். இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நேரடி ஒளிபரப்பு
நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள இந்தியா அனுப்பிய சந்திரயான் -3 விண்கலம் நேற்று மாலை வெற்றிகரமாக தரையிறங்கியது. உலகமே உற்றுநோக்கிய இந்த விண்கலம் வெற்றியடைந்ததால் இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
இதனை உலகம் முழுவதும் பார்வையிட்டனர். இந்த வரலாற்று சாதனை நிகழ்வை புதுக்கோட்டை மாவட்டத்திலும் மக்கள் தங்களது வீடுகளில் தொலைக்காட்சியிலும், ஸ்மார்ட் போன்களிலும் நேரலையில் பார்த்தனர். இதேபோல தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் 3-வது தளத்தில் கூட்டரங்கில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண மாணவ-மாணவிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மேலும் அதிகாரிகளும் கூட்டரங்கில் இருந்தனர்.
இந்தியாவுக்கு பெருமை
இஸ்ரோவின் நேரடி ஒளிபரப்பை எல்.இ.டி. திரையில் பிரமாண்டமாக ஒளிபரப்பப்பட்டது. இதனை மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் உற்சாகமாக பார்வையிட்டனர். அந்த லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியபோது அரங்கில் இருந்த அனைவரும் உற்சாகத்தில் கைத்தட்டி மகிழ்ச்சியடைந்தனர். மேலும் உற்சாகத்தில் பலத்த குரல் எழுப்பினர். உலகமே உற்றுநோக்கிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றியடைந்ததால் மகிழ்ச்சியில் திகைத்தனர். அப்போது கூட்டரங்கில் இருந்த அப்துல்லா எம்.பி. பேசுகையில், `நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதில் இந்தியாவுக்கு பெருமை. இந்த விண்கல திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்த வீர முத்துவேல் என்பதில் மேலும் நமக்கு பெருமை. மாணவ-மாணவிகள் நீங்களும் எதிர்காலத்தில் இதேபால சாதனை படைக்க வேண்டும்' என்றார்.
தொலைநோக்கி கருவி
இந்த நிகழ்வை தொடர்ந்து தொலைநோக்கி கருவி மூலம் நிலவை பார்வையிட அறிவியல் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து புதுக்கோட்டை நகரில் பல்ேவறு இடங்களில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அப்போது சந்திரயான்-3 பற்றி அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகி பாலு விளக்கி கூறினார். இதேபோல் அறிவியல் இயக்க அலுவலகத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சந்திரயான்-3 வெற்றியடைந்தது தொடர்பாக மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
கல்லூரி மாணவி பிரியங்கா:- ``நிலவில் தென்துருவத்தில் கால் பதித்து இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இந்தியாவின் பெயரை உலகம் முழுவதும் பெருமையடைய செய்துள்ளது. சந்திரயான்-3 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு மிகவும் பெருமை. இதனை பார்க்கும் மாணவ-மாணவிகளும் நாமும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும். எங்களை போன்ற மாணவ-மாணவிகளுக்கு இது மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.''
ஆர்வமுடன் எதிர்பார்ப்பு
பள்ளி மாணவி மகாலட்சுமி:- ``நான் பிளஸ்-2 படித்து வருகிறேன். சந்திரயான்-3 விண்கலம் நிலவை நோக்கி பாய தொடங்கியதில் இருந்து ஆர்வமாக இருந்தேன். நிலவில் எப்போது கால் பதிக்கும் என்று எண்ணம் இருந்தது. கடந்த முறை சந்திரயான்-2 கடைசி நேரத்தில் பாதையை விட்டு விலகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் தற்போது எப்படி இருக்கும் என பரபரப்பும், எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் வெற்றிகரமாக தரையிறங்கியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது''.
உலக வரலாற்றில் இடம்
அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வீரமுத்து:- ``இந்தியாவின் சாதனை உலகம் முழுவதையும் உற்றுபார்க்க வைத்துள்ளது. ரஷியாவின் விண்கலம் தோல்வியடைந்த நிலையில், சந்திரயான்-3 எப்படி தரையிறங்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நமது விஞ்ஞானிகள் மூலம் வெற்றிகரமாக தரையிறங்கி உலக வரலாற்றில் இடம்பிடித்தது. நிலவில் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு மனிதர்கள் சென்று வாழ தகுதி இருக்கிறதா? அங்குள்ள கனிம வளங்கள் குறித்து தகவல்களை அனுப்பும் போது எதிர்காலத்தில் நமக்கு மேலும் பெருமை சேர்க்கும். மேலும் அடுத்த திட்டத்தையும் வெற்றிகரமாக சாதிக்க முடியும்.''
இந்தியாவுக்கும் பெருமை
பள்ளி மாணவர் சுபாஷ்:- ``நிலவில் லேண்டர் தரையிறங்கிய காட்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. விஞ்ஞானிகளின் சாதனை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை தேடி தந்துள்ளது. எங்களை போன்ற மாணவர்களுக்கு இதுபோன்று சாதிக்க வேண்டும் என மிகவும் ஆர்வத்தை தூண்டுகிறது. நிலவை பற்றி மேலும் பல தகவல்களை எதிர்காலத்தில் அறிந்து கொள்ள முடியும்''.
இவ்வாறு அவர்கள் கூறினர்.