< Back
மாநில செய்திகள்
தேவையான நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் சாலைமறியல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தேவையான நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் சாலைமறியல்

தினத்தந்தி
|
12 July 2023 1:54 PM IST

திருத்தணி அருகே தேவையான நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்தணி அரசு பஸ் பணிமனையில் இருந்து தாழவேடு, தும்பிக்குளம், பூனிமாங்காடு, நல்லாட்டூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வந்த பஸ்களின் நேரத்தை திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை நிர்வாகம் மாற்றி அமைத்தது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் காலை மற்றும் மாலையில் சென்று வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள், அரசு அலுவலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே பயணிகள் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி திருத்தணி போக்குவரத்து பணிமனை நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை தாழவேடு பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தேவையான நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ேமலும் ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி போக்குவரத்து பணிமனை மேலாளர் அரிபாபு மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நேரத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் திருத்தணி- நல்லாட்டூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாலங்காடு ஒன்றியம் சந்தன கோபாலபுரம் கிராமத்திற்கு திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்காக மாலை நேரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களாக இந்த சரியாக அரசு பஸ் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் வீடு திரும்புவதற்கு இரவு ஆகிவிடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று மாலை திடீரென நேரம் கடந்து வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்