< Back
மாநில செய்திகள்
பள்ளி செல்லத் தொடங்கிய சிறுமி டானியா - வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் ட்வீட்
மாநில செய்திகள்

பள்ளி செல்லத் தொடங்கிய சிறுமி டானியா - வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் ட்வீட்

தினத்தந்தி
|
11 April 2023 10:45 PM IST

பள்ளி செல்லத் தொடங்கிய சிறுமி டானியாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் வீராபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சவுபாக்யா தம்பதியின் மகள் டானியா, அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுமி டானியாவின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யக்கோரி முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமிக்கான சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சிறப்பு மருத்துவக்குழு கூடி சிறுமிக்கான முக சீரமைப்பு சிகிச்சைக்கு திட்டமிட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு பிரதான அறுவை சிகிச்சையும் டானியாவுக்கு மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் ஓய்விலிருந்த சிறுமி டானியாவை, அவரது இல்லத்துக்கே சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இதனிடையே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் வாயிலாக வீட்டிலிருந்தபடியே 4-ம் வகுப்பினை டானியா முடித்தார். இதனைத் தொடர்ந்து சிறுமி டானியா தற்போது ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவு வாயிலாக டானியாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"அன்புள்ள டானியாவுக்கு, பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன். மகிழ்ச்சி! ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்!"

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்