திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
|கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயரிங் மாணவர்
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சிவா என்பவரின் மகன் காடி ராம் மணிகண்ட சந்திரசேகர் (வயது 20) என்பவர் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வந்த மாணவன் சந்திரசேகர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை மாணவன் தங்கி இருந்த அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சந்திரசேகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
அவருடன் விடுதியில் தங்கி இருந்த சக மாணவர்கள் சந்திரசேகர் தூக்கில் தொங்கியதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் போரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் சில பாடங்களில் அரியர் வைத்திருந்ததாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.