விழுப்புரம்
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜர்
|மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பள்ளியின் முன்பு மாணவர் அமைப்பினர், இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது.
இதனிடையே மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிபந்தனை ஜாமீனில் தளர்வு
இந்த சம்பவத்தில் கைதான ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிபந்தனை காலம் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 4 வார காலம் 5 பேரும் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இந்த சூழலில் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் வழங்கப்பட்டிருந்த நிபந்தனை ஜாமீனில் தளர்வு அளிக்கப்பட்டு மறு உத்தரவு வரும் வரை வாரந்தோறும் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
5 பேரும் ஆஜர்
இதன் அடிப்படையில் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் நேற்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி முன்னிலையில் அவர்கள் 5 பேரும் அலுவலக கோப்பில் கையெழுத்திட்டனர். அதன் பிறகு இவ்வழக்கு சம்பந்தமாக 5 பேரிடமும் போலீசார் சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.