கடலூர்
ஸ்ரீமதி மரணமடைந்த அன்று பள்ளி நிர்வாகத்துடன் மாணவியின் தாய் பேரம்? பரபரப்பு தகவல்கள்
|ஸ்ரீமதி மரணமடைந்த அன்று பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசியதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து, அது தொடர்பாக மாணவியின் தாய் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ராமநத்தம்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி செல்வி. இவரது மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஸ்ரீமதியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சார்பில் 5 பேர், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 4 பேர், பள்ளி வளாகத்தில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதோடு, இந்த சந்திப்பின் போது, ஸ்ரீமதியின் தாய் செல்வி பேரம் பேசியதாகவும் கூறி தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் அழைத்து சென்றனர்
இது குறித்து மாணவியின் தாய் செல்வியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சம்பவ நாளான கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி, ஸ்ரீமதியுடன் அறையில் தங்கி இருந்த 3 மாணவிகள் பள்ளியின் உள்ளே இருப்பதாகவும், அவர்களை எங்களிடம் பேச அனுமதிப்பதாக கூறி தான் நான் உள்பட 4 பேரை மட்டும் போலீசார் அழைத்து சென்றனர்.
பள்ளி வளாகத்துக்குள் சென்ற பின்னர், என்னை மட்டும் உள்ளே செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி அந்த 3 மாணவிகள் அங்கு இ்ல்லை. அவர்களை பெற்றோர் வந்து அழைத்து சென்றுவிட்டனர் என்றனர்.
பொய்யான தகவல்
அதன்பின்னர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி நிர்வாகி ரவிக்குமாரின் நண்பர்களான மோகன், செல்வம், மேலும் பெயர் தெரியாத 2 பேர் அங்கு வந்தனர். அவர்களிடம் ஸ்ரீமதியின் மரணம் குறித்து கேட்டதுடன், கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டோம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியவில்லை.
அதன்பின்னர், பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம், பேசி முடித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். அதை நாங்கள் ஏற்காமல் வெளியே வந்துவிட்டோம்.
தற்போது, பள்ளிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது. இதை திசைதிருப்பும் விதமாக ஜாமீனில் வந்த ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.