விழுப்புரம்
புதுச்சேரி ஜிப்மர் குழுவினால் ஆய்வு செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்
|கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு, தனது ஆய்வறிக்கையை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த மாதம் 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தினர், மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த மாதம் 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இச்சம்பவம் தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை
இதற்கிடையே உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் கடந்த மாதம் 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு டாக்டர்கள் 3 பேர் கொண்ட குழு முன்னிலையில் மாணவியின் உடல் கடந்த மாதம் 19-ந் தேதியன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு 23-ந் தேதியன்று ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
மேலும் மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் குஷகுமார் சாஹா, தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் சித்தார்த்தாஸ், தடயவியல் துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா ஆகிய 3 பேரை கொண்ட ஒரு குழுவை அமைத்தும், இந்த குழுவினர் மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தங்கள் ஆய்வறிக்கையை, மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கை
இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடலை பிரேத பரிசோதனை செய்த முடிவு மற்றும் மறுபிரேத பரிசோதனை செய்த முடிவுகளை ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மூலமாக கடந்த 1-ந் தேதியன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அக்குழுவினர் தங்கள் ஆய்வை தொடங்கினர். இக்குழுவினர், மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்த நிலையில் அந்த ஆய்வு முடிந்ததும் அதனை அறிக்கையாக தயார் செய்தனர். இந்த ஆய்வறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்தனர்.
கூடுதல் வழக்குப்பிரிவுகள்
இந்த ஆய்வறிக்கையை பொறுத்து மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மேலும் கூடுதலாக சில வழக்குப்பிரிவுகளை சேர்க்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு இவ்வழக்கு தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி ஓரிரு மாதங்களில் போலீசார், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த, மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தற்போது இவ்வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
மாணவியின் 2 தோழிகள் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம்
மாணவி ஸ்ரீமதி மரணம் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் உறவினர்கள், மாணவியின் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர் படித்த பள்ளி நிர்வாகத்தினர், மாணவிக்கு வகுப்பு எடுத்த ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பள்ளியில் உள்ள பிற ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளியில் படித்த அவரது தோழிகள் அளிக்கும் வாக்குமூலமே இவ்வழக்கின் முக்கிய சாட்சியமாக கருதப்படுவதாலும், அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்பதாலும் மாணவியின் தோழிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து அதற்கான ஒப்புதலை நீதிமன்றத்திடம் இருந்தும் பெற்றனர்.
அதன் அடிப்படையில் நேற்று மாலை 4 மணியளவில் மாணவி ஸ்ரீமதியின் தோழிகள் 2 பேர், அவர்களது பெற்றோா் அனுமதியுடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி தங்கள் தோழி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக சுமார் 1½ மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம் முழுவதையும் நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் கோர்ட்டில் இருந்து புறப்பட்டுச்சென்றனர்.