< Back
மாநில செய்திகள்
மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவம்:  மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
கடலூர்
மாநில செய்திகள்

மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவம்: மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்

தினத்தந்தி
|
2 Aug 2022 11:15 PM IST

மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட இடைக்கமிட்டி செயலாளர்கள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு நெய்வேலி நகர செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், கடலூர் மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த, வழக்கில் சி.பி.சி.ஐ.டி. பாரபட்சமின்றி முழுமையான புலன் விசாரணை மேற்கொண்டு மாணவியின் சாவுக்கான காரணத்தையும், அதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளையும் தாமதமின்றி கைது செய்ய வேண்டும். இந்த விசாரணையை நான்கு நாட்கள் தாமதப்படுத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இவ்வழக்கில் மெத்தனமாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு வேப்பூர் கூட்டுரோட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர் தண்டபாணி, குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்