மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: விசாரணை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
|கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி விரைந்து தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர் தரப்பில் மகள் கொலை செய்யப்பட்டததாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன்,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
இந்ந நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்.27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.