< Back
மாநில செய்திகள்
மாணவிக்கு, ஆசிரியர் செல்போனில் பாலியல் தொல்லை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மாணவிக்கு, ஆசிரியர் செல்போனில் பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
14 Dec 2022 12:15 AM IST

நாகை தனியார் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் செல்போனில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

நாகை தனியார் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் செல்போனில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

நர்சிங் கல்லூரி

நாகையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் உள்ளூர் மற்றும், வெளியூரில் இருந்து மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவிகளுக்கு விடுதி வசதியும் உள்ளது.

இந்த நிலையில் அந்த கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசுகிறார்.

அதில், உன் மீது புகார் வந்துள்ளது. உன்னிடம் விசாரணை நடத்த வேண்டும். அதனால் எனது வீட்டிற்கு வரவேண்டும் என செல்போனில் கூறுகிறார். அதற்கு அந்த மாணவி, நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறுகிறார்.

பாலியல் தொல்லை

அதற்கு அந்த ஆசிரியர், வீட்டிற்குத்தான் வரவேண்டும் என கட்டாயப்படுத்தி அழைப்பு விடுக்கிறார். ஆசிரியர் தொடர்ந்து தொல்லை கொடுத்த காரணத்தால் அந்த மாணவி ஆசிரியரிடம் எதையோ சொல்லி சமாளிக்க முயல்கிறார்.

ஆனால் அந்த ஆசிரியர் விடாமல் அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுப்பது போல பேசி தனது வீட்டிற்கு அழைக்கும் செல்போன் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

இந்த செல்போன் ஆடியோவை மாணவி தனது பெற்றோர் மூலம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் அருண்தம்புராஜ் சம்மந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை நடத்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலர் தமிமுன்சா தலைமையில் சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு வந்தனர்.

மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை

அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கினர். சுமார் 1 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் சமூகலநத்துறை அதிகாரிகள் கல்லூரியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

மாணவிகளிடம் பெறப்பட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். அதே நேரத்தில் விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்பிக்கப்படும். அதன் பின்னர் இது தொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பரபரப்பு

நாகை தனியார் நர்சிங் கல்லூரி ஆசிரியர், அங்கு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போல செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்